வியாழன், 12 ஜனவரி, 2012


'ஒல்லி பெல்லி' இல்லியானாவில் இருந்து சத்யராஜ், ஜீவா, சிறீகாந்த், அக்கா அனுஜா வரை பலரிடம் படம் நெடுகிலும் அடிவாங்கிக் கொண்டே வெற்றி பெற்றிருக்கிறார் விஜய். அதிக படங்களில் நூறு, இருநூறு ரவுடிகளை(?) அடித்து தன்னுடைய 'மாஸ்' அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருந்த விஜய்க்கு, அந்தப் படங்களில் கிடைக்காத மாஸ் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது நண்பன். எரிச்சல் படுத்தாத இந்த புதிய மாஸ் அந்தஸ்து எல்லோருக்கும் பிடித்துப் போகும்!

இந்தியாவி்ன் மிகப்பெரிய வெற்றிப்படம் '3 இடியட்ஸ்'. அமீர்கான் என்கிற நல்ல நடிகர், அதிகம் அலட்டல் இல்லாத சிரிக்க வைத்து கருத்துச் சொன்ன திரைக்கதை என்று அசத்திய படம். அப்படிப்பட்ட படமொன்றில் அமீர்கான் பாத்திரத்தில் விஜய், ராஜ்குமார் ஹிரானி என்கிற நகைச்சுவை தெறிக்கிற இயக்குனருக்குப் பதில் இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இந்தக் கூட்டணியே சின்ன பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், மாஸ் ஹீரோவும்- மாஸ் இயக்குனரும் படத்தின் மூலக்கதையில் ஏதாவது மாற்றம் செய்து சொதப்பி விடுவார்களோ என்று...?! நல்லவேளை, ஷங்கர் அப்படியெந்த முயற்சியையும் செய்யவேயில்லை. ஷங்கரும் தப்பித்தார். நாமும் தப்பித்தோம். படமும் நல்ல விதமாக வந்திருக்கிறது.

விஜய்யை 'கில்லி' படத்துக்குப் பின்னர் நான் அதிகம் ரசித்தது நண்பனிலேயே. இடையில் காவலனிலும் கொஞ்சம் ரசிக்க வைத்தார். சிறந்த நடிகர்- அசாத்தியத் திறமை (?) என்கிற வார்த்தைகள் எல்லாம் தேவையேயில்லை. அதுபோக, அப்படிப்பட்ட நடிகரும் “நண்பன்“ படத்துக்கு அவசியமில்லை. பக்கத்து பெஞ்சில் இருந்த- இருக்கிற கல்லூரிக்கால நண்பனை ஞாபகப்படுத்தினால் போதுமானது. அந்த ஞாபகத்தினை விஜய்யால் இயல்பாக கொண்டுவர முடிகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஏற்கனவே பதிவொன்றில் குறிப்பிட்ட மாதிரி “பாரி“ பாத்திரத்துக்கு தமிழில் மிகச்சிறந்த தெரிவு விஜய்! அதை நிரூபித்திருக்கிறார்!!

(3 இடியட்ஸில் கொஞ்சம் குள்ளமாக இருக்கிற அமீர்கான், காலை நிலத்தில் உன்றி உன்றி அவ்வப்போது எம்பி எம்பி கதைப்பது போன்ற காட்சிகளே அதிகம். ஆனால், அது நண்பனில் மிஸ்ஸிங். ஏனெனில், விஜய் அமீர்கனைவிட ஓரளவு உயரமாக இருப்பதால் எம்பி எம்பி பேசவேண்டிய தேவை ஏற்படவில்லை. அப்படி பேசியிருந்தால், சத்தியராஜ்யைத் தவிர மற்றவர்கள் எல்லாம் விஜய் தோன்றும் காட்சியில் எம்பி எம்பி வசனம் பேசவேண்டி வந்திருக்கும். நிச்சயமாக படம் பார்க்கும் போது அது ரொம்பவும் ஞாபகத்துக்கு வந்தது.)

ஷங்கர்....! ஊழல்கள்- கறுப்பு அரசியலுக்கு எதிராக (?) தன்னுடைய அதிக படங்களில் கருத்துச் சொல்லி வந்த பிரமாண்ட இயக்குனர். தன்னுடைய எல்லைகளை அதிகளவில் தாண்டி வந்து இயக்கியிருக்கிற முதல் ரீமேக் படம். மூலத்தில் எந்த சேதாரத்தையும் உண்டு பண்ணாமல், ஒரு பாடலை மட்டும் அதிகமாகச் சேர்த்திருக்கிறார் தன்னுடைய ஸ்டைலில், தன்னையே கிண்டல் பண்ணும் அளவுக்கு. ரீமேக்கும் இயக்குனர்களில் அதிகளனோர் திரைக்கதையிலும் தன்னுடைய பெயரையே போட்டுக் கொள்வார்கள். ஆனால், நண்பனில் அந்த வேலையை ஷங்கர் செய்யவில்லை. தன்னை இயக்குனராக மட்டும் காட்டியிருக்கிறார். (ஆமா, அந்த எந்திரன் கதை திருட்டு விவகாரம் என்னாச்சு?)

ஒரிஜினலில் ஓமி வைத்யா செய்தா 'சைலன்சர்' பாத்திரம் நண்பனில் சத்யன். யம்மா என்னமா கலக்கியிருக்கிறார். அதுவும், அந்த ஆசிரியர் தின வரவேற்புரை நிச்சயமாக சிரித்து சிரித்து வயிறு வலிக்குமளவுக்கு இருந்தது. 3 இடியட்சை ரீமேக்கும் போது இருந்த முக்கிய சிக்கலான காட்சி அதுதான். அந்தக் காட்சியை ஷங்கரும்- மதன் கார்க்கியும் தங்களின் வசனத்தின் உடைந்தெறிந்துள்ளனர். கல்வி கலவியான இடமும், கற்பித்தல் கற்பழித்தலான இடமும் உரையின் போக்கை கன்னாபின்னவென்று மாற்றி ரசிக்க வைத்திருக்கறது. தியேட்டர் முழுவதிலும் அதிக சிரிப்பொலியுடன்.

பொருத்தமற்ற கற்பித்தல்- கல்வி முறைக்குள் சிக்கி மாணவர்களும்- சமூகமும் எப்படி பிரச்சினைகளைச் சந்திக்கிறது என்பதை சிரிக்க சிரிக்க வைத்து இயல்பாக கருத்து சொன்னதற்காகவும், விஜய் என்கிற நடிகரை ரசிக்க வைத்ததற்காகவும் நண்பனை நான் கொண்டாடுவேன். '3 இடியட்ஸை' நான்கு தடவைகள் பார்த்த எனக்கே நண்பனை இவ்வளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், முதல் தடவையாக பார்க்கும் ரசிகனுக்கு நிச்சயமாக இது சர்க்கரைப் பொங்கல்தான்!

'விண்ணைத்தாண்டி வருவாயா' பார்த்துவிட்டு வரும்போது மனதில் ஒரு நல்ல பீலிங்க் இருந்தது. தியேட்டரில் கொடுத்த காசை நினைத்து பார்க்க விடாமல் படமே என்னை ஆட்கொண்டிருந்தது. அதுபோலத்தான், நண்பன் முதல்காட்சி ரிக்கட்டுக்காக செலவளித்த ஆயிரத்தைத் தாண்டிய தொகை ஞாபகத்துக்கு வரவேயில்லை. படம் என்னை அவ்வளவுக்கு ரசிக்க வைத்தது. படத்திலிருக்கிற சின்னச் சின்ன குறைகளை இந்த கொண்டாட்ட மனநிலை எழுத அனுமதிக்கவில்லை. அதுபோக, இதுவொன்றும் விமர்சனம் இல்லை. இது அனுபவம் மட்டுமே!

'நண்பன்' ஆல் இஸ் வெல்! கலக்கல் மாமு!! ஆமா, கிஸ்ஸடிக்கும் போது மூக்கும் மூக்கும் இடிச்சுக்குமா?! இல்லை. இல்லியானா- விஜய்க்கு அடிக்கும் கிஸ்ஸில் இடிக்கலையே மூக்கு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக