புதன், 8 பிப்ரவரி, 2012

பிப்ரவரி28 ஸ்டிரைக்: திருப்பூரில்


பிப்ரவரி 28ம் தேதி அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தை திருப்பூரில் வெற்றி பெறச் செய்வதென்று சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் செவ்வாயன்று மாலை பனியன் தொழிலாளர் சங்க முன்னணி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு பனியன் தொழிலாளர் சங்கச் செயலாளர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், பனியன் தொழிலாளர் சங்கத் தலைவர் கே.காமராஜ், பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் சி.மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.

மத்திய அரசு பின்பற்றும் தவறான மக்கள் விரோதக் கொள்கைகள் காரணமாக விலைவாசி உயர்வு தொழிலாளர் குடும்பங்களை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. மேலும் தொழிலாளர் சட்டங்களும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. எனவே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், முறைசாராத் தொழிலாளர் நலவாரியத்திற்காக நாடு முழுவதும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை உறுதியாக அமலாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 28ம் தேதி மத்தியத் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்துவதை திருப்பூரில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

அத்துடன் பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக சைமா, டீமா உள்ளிட்ட உற்பத்தியாளர் சங்கங்களுடன் 32 சதவிகிதம் சம்பள உயர்வு வழங்குவது என்ற அடிப்படையில் சுமூக உடன்பாடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மட்டும் சம்பள ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் முரண்டுபிடித்து வருவதைப் பற்றி பனியன் சங்க நிர்வாகிகள் காமராஜ், மூர்த்தி ஆகியோர் சுட்டிக் காட்டினர். எனவே ஏற்றுமதியாளர் சங்கத்தை புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவேற்ற வலியுறுத்தும் விதத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது பற்றி தொழிலாளர்களிடம் விரிவாகக் கொண்டு செல்வது என்றும் அவர்கள் விளக்கிக் கூறினர்.

இக்கூட்டத்தில் டிசம்பர் 28 வேலைநிறுத்தத்தை திருப்பூரில் முழு வெற்றி பெறச் செய்வது, பனியன் தொழிலாளர்களுக்கு ஏற்றுமதியாளர் சங்கம் மூலம் சம்பள ஒப்பந்தத்தை நிறைவேற்ற போராட்டத்தை வலுப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பனியன் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக